Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
தேடுபவை யாவும் தேடுமா றமையவும்
நாடுபவை யாவும் நலமுடன்வந் தேகவும்
கூடுபவை யாவும் குணமுயர்த் திடவுமாய்
ஓடும்நாள் வாழ்வின் உன்னதம் நல்கவே.
அகரதமிழ் முழங்குமிடம் ஆலயமாய் விளங்குமிடம்
பகரகுரு வாழுமிடம் படிநிலைக்கு உயர்த்துமிடம்
மகரவொளி வீசுமிடம் மரகதமாய் திகழுமிடம்
உகரமுயிர் உய்யுதற்கு ஞானவெளி ஆனந்தபீடம்.
உள்ளம் படுதுயரம் உனைவிட் டோடுமினி
கள்ள மலக்கூட்டம் கருத்தவிழ்ந்து விலகுமினி
வெள்ளம் வினைநீக்க விரைந்துவந் துதவுமினி
அள்ளக் குறையாத அமுதூறும் அகந்தெளிய.
நன்றுசெய் நல்லோர் வழிபார்த்து தானஞ்செய்
அன்றுசெய் வினைக்கு ஆவனசெய் அறஞ்செய்
இன்றேசெய் இன்முகத் தோடுதொண்டு குருவழியில்
நின்றுசெய் நித்திலத்தில் நிம்மதிக்கு நீவிரைந்தே.
நலமும் வளமும் நட்புசூழ் உறவும்
பலமும் பணமும் பகையிலா வாழ்வும்
நிலமும் நித்திரை சுகமும் நிம்மதியும்
விலகா திருக்க மெஞ்ஞானம் ஆள்கவே.
அன்பு வேண்டும் அன்பே வேண்டும்
அன்பன்றி ஏதுவேண்டும் அன்பிலா துயிரும்
துன்பிலே மாட்டுமே துயர்வந்து கூட்டுமே
இன்பிலா இறப்பிலே இனிபோகா திருக்கவே.
கழிந்தது கர்மா கருணையின் துணையால்
வழிந்தது பெருமான் ஆசியோ விழியால்
இழிந்தது எல்லாம் இல்லாதே யொழிந்தது
அழிந்தது ஆகாத தென்றகங் குளிருமே.
போகும் இனிதுயரம் பொல்லாப்பு வினையாவும்
சாகும் மமதையொடு ஆணவக் கன்மந்தான்
நோகும் நிலைமாறி நித்தியத்தின் வாசமொடு
ஆகும் அஞ்சொடு ஒன்பதின் ஆற்றலுமே.
வான்பேசும் வளர்மதி பேசும் வன்னியுந்
தான்பேசும் தாலாட்டுந் தென்றலும் பேசும்
வானிறங்கும் நீர்பேசும் நிலம்பேசும் கதிர்பேசும்
யானமைத்தக் குடும்பத்தை யாவரும் போற்றுவரே.
ஆதியில் அந்தம் அந்தத்தில் ஆதி
நீதியும் பிழையும் விதிப்படி விளையும்
ஓதியும் உதவா மறையும் உளவே
வேதியர் உயர்வு ஒழுக்கத் துறைவே.
நன்றுந் தீதும் நானறிய தாயுரைத்தாள்
முன்னைசெய் வினைவந்து அலைபாய விட்டதெனை
என்றிதற்கு விடிவென்று மனந்தேட மார்க்கத்தை
ஒன்றியுனை யல்லால் பெறவரிதென் றுணர்ந்தனனே.
நாளொன்று வீழ நமன்வந்து சேர
ஆளெல்லாம் கூட திரும்பாமல் செல்ல
வாளென்று அழுதார் வாளா திருக்க
தேள்வந்து கொட்ட தெளிவிப்பாய் என்குருவே
அறியா பேர்க்கு அதுஒரு மாயை
அறிந்துணர்ந் தோர்க்கு அதுதான் லீலை
குறியாய்த் தேடி குவலயத் தலைவார்
முறையாய் குருவைப் பற்றிட வருமே
இனியொரு பிறப்பிலை இனிதுயர் உனக்கிலை
இனிவரு நாளெலாம் இன்பிற்கு குறைவிலை
இனிமனம் அடங்கிட இறைமணங் கமழ்ந்திட
இனியுள நாள்மட்டும் இறைத்தொண்டே உன்தொண்டு.
நான் கண்ணாடி உன்னை என்னில்காண்
நான் மெய்யறிவு என்னை உன்னில்காண்
நான் உருவம் அருவத்தின் அடையாளம்
நான் உயிர்ப்பொருள் உடல்காக்க என்னைசேர்.
தொடுவார்த் தொட்டால் குறைகழன் றோடும்
படும்வினை யாவும்
பறந்தழிந் தோடும்
நடந்ததும் நடப்பதும்
நடுகண் அறியும்
திடமுடன் குருவழி
தொடர்பவர் தமக்கே
ஒருநாளா விருநாளா ஒவ்வொரு நாளுந்தன்
விருகண்ணை மூடியுனை நினைக்காத பொழுதில்லை
மருந்தானாய் வினைக்கு மனமாறி அருள்தேட
விருந்தானாய் துணையானாய் ஞானவெளி அடியருக்கே.
வேண்டுதற் கேதுளது யாவும்நீ அறிவயென்
ஆண்டே இனிபிறப்பில் சிக்காதுன் சீரடிக்கண்
யாண்டும் இரும்பேறு போதுமல்லால் உளவரைக்கும்
தூண்டும் மனமொடுங்கி செய்வேனுன் தொண்டு.
ஆண்டேயுன் அடிவீழ்ந்தேன் ஆதரிப்பாய் அகபுறத்தை
தூண்டும் மனவிச்சை துவண்டுமெய் ஞானத்தில்
யாண்டும் இறைவாசத் தோடிருந்தால் போதும்.
உணர்த்தும் நிலையுனது உணரும் நிலையெனது
கணக்கைக் கைக்கொண்ட கர்மா மிகப்பெரிது
இணக்கம் நமக்குள்வர இல்லை துயரெனக்கு
வணக்கம் உனக்கல்லால் மண்ணில் எவர்க்குரித்து.
ஆர்க்குரைப்பேன் ஆரறிவேன் ஆறுதலெங் கடைவேன்
சீர்த்தியுற சித்தம்நீ கொளவிலையேல் சீரழிவேன்
நேர்த்தியுற நித்தம்நான் நிம்மதியை நாடுகிறேன்
பார்த்தருள்வாய் பரனேநீ பழவினை யுணர்ந்தமனனே.
தந்தநாளை தான்திரும்ப பெறவிரும்பான் தந்தான்
வந்தநாளை வாய்ப்பிதுவென் றேநினைப்பான் நல்லான்
இந்தநாளை இன்பமுற வாழுதற்குப் பல்லுயிரைச்
சொந்தமாக எண்ணிடுமின் சோகமில்லை சுகமே
தன்மனம் சொல்வதோ தானுற்ற கர்மாவால்
தன்னறிவு என்பதுவும் மனம்பெற்ற மாற்றந்தான்
இன்னுமிதை உணரார்க்கு விடிவேது உயர்வேது்
தன்னை வழிநடத்த குருவந்தால் தெளிவாமே.
பொய்தீண்டா நெஞ்சுடையார்
பெறுவதெலாம் தானடைவர்
மெய்தீண்டா வாக்குடையார்
மேதினிக்குப் பழியாவார்
செய்வதுவும் சொல்வதுவும்
இழுக்குற்றால் இழிவடைவர்
உய்யமனம் வேண்டிநின்றார்
உறைந்திடுக உண்மையுளே.
ஒன்றே பலவாகி பலவின்று ஒவ்வொன்றாய்
அன்றே கொண்டவினை அணைந்துவந் தாள்வதனை
நன்றே உள்ளுணர்ந்து நாமெல்லாம் ஒன்றென்றால்
அன்றே வினைபோகும் அண்டம்வருங் காலடிக்கே.
வினைகழற்ற வந்தவெனை விரட்டிவந்த புதுவினைகள்
வனைத்தெடுத்து மாற்றியதை வாயுரைக்க வல்லேனே
தினையளவு செய்தபலன் தெரிகிறது இறைநினைவில்
எனைமறந்து வாழுகிறேன் என்றென்றும் உன்னடிக்கே.
வேண்டுதல் வேண்டாமென் றேயிடித் துரைத்து
யாண்டுமுன் பொன்னடிக்கண் சிந்தைவைத் திருக்கவும்
மூண்டெழும் கர்மாவை முழுதுமா யோட்டவும்
தூண்டினை குருவாகி ஞானவெளி யன்பருக்கே.
எப்பிறப்பு புண்ணியமோ எனக்கிங்கு வாய்த்துளது
அப்பாவுன் அடிக்கேநான் ஆளாகிப் போனேனே
தப்பினிமேல் வாராது தடுத்தென்னைக் காத்திடுவாய்
ஒப்பில்லா தத்துவனே இறையே என்குருவே.
எண்ணிய வாறெல்லாங் கூடுமென் றெண்ணி
திண்ணிய ராயுன் திருத்தாள் பணிந்தோம்
கண்ணிமை யுள்ளிருந்து காக்குமுன் கருணைக்கு
மண்ணிமை மூடுவரை மறவோம் மறவோமே.
கொண்டு வந்ததை விட்டுச் சென்றிட
கண்டுச் சொல்பவர் யாரெனக் கேட்க
பண்டை அறிந்தயெம் பரனென வீழ
முண்டி உதவினன் ஞானவெளி யன்பருக்கே.
பேசா எழுத்தறிந்து பேசுகிற வித்தையை
ஆசா னாயிருந்து அறிவிப்பாய் என்தனுக்கே
ஈசா நீஇருக்கும் இடமறிய வல்லார்க்கு
கூசா மலேயவர் குறைகளைவாய் என்குருவே
பெற்றதாய் யன்பும் பேணிடுந் தந்தைபோல்
பற்றுவைத் தேகாக்கும் பரனேயுன் பொன்னடிக்கு
இற்றையிப் பிறப்பன்று இனியுள திலெல்லாம்
சற்றுஞ் சளைக்காது சரணிட்டுக் கிடப்பேனே.
பட்டதுய ரெல்லாம் போதுமினி வாராது
துட்டர் தொடர்புமினி தொந்தரவு தாராது
விட்டகுறை தீர்ந்து பிறப்புமினி அமையாது
இட்டமுடன் இணைந்த ஞானவெளி அன்பருக்கே.
பண்டிருந்த வினையைப் பாழாக்க வந்தும்
உண்டுடுத்து உறங்கி உல்லாசங் கழித்தும்
கொண்டதினும் மேலாய் பெருக்க விடிவேது
தொண்டொன்றே மருந்தென்று செய்வீர் விரைந்து
ஒட்டிக் கொண்டவினை உடனிருந் துழற்றுவதை
சுட்டிக் காட்டிமனம் சுதந்தரித்துக் கொள்ளுதற்கு
கொட்டிக் கொடுத்தாய் உபதேசம் வேதமுடன்
எட்டி நிற்காது என்றென்று முயிருனையே.
உருகி வேண்டினும் உணர வியலாத
கருவில் மூடிய என்தனி மந்திரம்
அருகில் வந்திட காதில் உரைத்தனை
உருவம் பெற்றதன் பயனுணர்ந் தனனே.
எங்குளா யென்று எண்ணித் திரிவார்க்குள்
இங்குளா யென்று இதயத்தே கண்வைத்து
பொங்குமருள் கண்டுகண்டு பேறுற்றோம் உயிரும்
தங்குமென் தனிமந்த்ரம் தீட்சைதந் தணைத்தனையே
சிந்தையில் ஒளியும் செயலில் பலிதமும்
முந்தை வினைக்கு முடிவிங் கமையவும்
எந்தை பிரானின் மெஞ்ஞானம் உதவவும்
வந்திங்கு பெற்றனர் ஞானவெளி அடியரே.
நம்பினார் யாவருக்கும் நல்லருளே பாலித்து
வம்பிலா வாழ்வமைத்து வளம்யாவும் சேர்ப்பித்து
தம்பிரான் தன்னருளால் தவயோகம் கூடவைத்து
இம்மைக்கும் மறுமைக்கும் ஞானவெளி அருளிடுமே.
கரங்குவிப்பார் தம்மனத்து கருணைக்கா ளானேன்
சிரந்தாழ்த்தும் சிந்தனையார் சொல்லில்வடி வானேன்
தரந்தாழ்த்தித் தெண்டனிட்டார் அன்பிலுயி ரானேன்
பரமென்று பகர்ந்தென்னுள் பயணிப்பார் நானே.
நின்நலம் நின்வசம் ஆனதால் என்றுமே
நின்குணம் நற்குணம் ஆகுதல் தேவையே
நின்செயல் தரும்பலம் அல்லவோ பிறவிக்கு
நினையாட் படுத்துமா றுள்ளதை உணர்மினே.
அழுதால் வினைதீரக் கூடுமெனில் அழுவேன்
தொழுதால் படியேற முடியுமெனில் தொழுவேன்
விழுதாய் உனக்கிருக்கக் கூடுமெனில் விழுவேன்
கழுவாய் காட்டுமுந்தன் கருணைக்கு ஆளானேன்.
துதிப்பார்க்கு நலமருளும் தூமணியே என்றும்
மதிப்பார்க்கு மதியருளும் மாமறையே மண்ணில்
சதிப்பாரை சாய்த்துவிடு சஞ்சலத்தை ஓட்டிவிடு
எதிர்ப்பாரே இல்லா நிம்மதியைத் தாவிறையே.
எத்தனைப் பிறப்புற்றேன் ஏதவத்தைப் பட்டேன்
அத்தனையு மறியுமுன் பொன்னடிக்கண் வீழ்ந்தேன்
சித்தமுற்று என்வினைக்கு விடிவளிக்கும் பெம்மானே
அத்தனே இனிபிறப்பு வேண்டேன் அருளுகவே.
தாயும் தந்தையும் தவமுற்ற குருபரனும்
நீயென்று கொண்டுமனம் நிம்மதியில் ஆழ்ந்திருக்க
நோயும் வருமோ நின்வேத பாடத்தை
ஓயாது ஓதுமிந்த ஞானவெளி அடியருக்கே.
இங்கமைவ தெல்லாம் இதற்குமுன் தேடினதோ
எங்குருநீ எடுத்துரைக்கா தேதுணர்வேன் மண்ணில்
தங்குமட்டும் தடையிலா நின்நினை வொன்றுபோதும்
பொங்குமருள் ஞானவெளி துணையுன்டு எனக்கே.
நீங்கா நினைவுநின்
நினைவாகும் வண்ணம்
தூங்காதே தொடரும்
துணிவெனக் கருளேன்
ஆங்காரத் தோடலையும்
அறிவிலிக்கு அகத்தொளியை
ரீங்காரத் தோடெழுப்பி
முத்தியிடு வென்னிறையே.
ஆதியே ஆனந்த பீடத் தரசே
சோதியே வினைமாற்ற வந்த குருவே
நீதியே உயிர்க்கெலாம் நித்தியப் பொருளே
போதித்து மீட்பாய் ஞானவெளி அடியருக்கே.
ஒருவாய் திறந்து இறைவா என்றிட
குருவாய் வந்துஎன் குணந்தனை மாற்றினை
திருவாய் மலர்ந்து வேதமும் மந்த்ரமும்
கருவாய் அடைக்கநீ தந்தையே போற்றி.
நோயிலா வாழ்வும் பகையிலா உறவும்
கோயிலாய் வீடும் குறைவிலா வளமும்
தோய்விலா வளர்ச்சியும் தொண்டிலே மகிழ்ச்சியும்
தாயெனச் செய்யும் ஞானவெளி யன்பருக்கே.
பொன்பொருள் சேரும் புனிதமுங் கூடும்
தன்னறிவுத் துலங்கும் தவம்வந் தேகும்
இன்பமே இல்லத்தில் இனியென்று மோங்கும்
அன்புடன் ஞானவெளி அடியரா னவர்க்கே.
யாதெனைத் தொட்டதோ ஊரார்கண் பட்டதோ
தீதெனைச் சுட்டதோ தெளிவிலா பூதத்தால்
வேதனை உற்றதோ உறவுவழி வந்ததோ
நாதனுன் நல்லடியே நாளுமென் காவலாமே.
உளநாள் வரைக்கும்
உயிரின் உறவாய்
விளங்கா புதிரை
அவிழ்க்கும் அறிவாய்
பலகால் தொடரும்
பிறப்பின் முடிவாய்
நிலமேல் எனக்கு
நீயே போற்றி.
என்றோ செய்ததோ ஏதுநான் செய்ததோ
இன்றொன்று மறிகிலேன் ஆயினும் என்செய்வேன்
நன்றே செய்யும் நாதனுன் அடிக்கே
அன்புசெய் தமைந்தேன் அருள்வதுன் கடனே.
பெற்றப் பேறிதுவோ பிழை விட்டுக் கழன்றதுவோ குறை
அற்று அகன்றதுவோ நிறை ஒட்டிக் கொண்டதுவோ மனம்
கற்றுத் தெளிந்ததுவோ பகை காற்றில் பறந்ததுவோ ஞானம்
முற்றும் நிலையிதுவோ இனி மண்ணில் பிறப்பிலையோ.
அற்றது வினையென அறிந்தது நெஞ்சகம்
கற்றதுக் கரைந்ததால் கலைந்தது வஞ்சகம்
பெற்றதுப் பேறென வீழ்ந்தனம் உன்வசம்
உற்றது உயிர்துணை உடையவன் நீயே.
வாழ்வோம் வாழ்விப்போம் என்றும்
வாழ்வோம் வாழ்விப்போம்.
அஞ்சுதல் வேண்டாம் நெஞ்சே ஆறுதல் குருவின் அடியே
வஞ்சகர் வாசம் விட்டே வாழ்நாள் முழுதும் தொண்டே
செஞ்சிடும் வன்மை வேண்டும் செயலிலே தூய்மை வேண்டும்
தஞ்சமாய் வந்த மண்ணில் தவத்துடன் மீள வேண்டும்.
வழியுண்டு மண்ணில் வாழ்வாங்கு வாழ
விழிகொண்டு உணர்வார்க்கு விதிதன்னை வெல்ல
பழிநீக்கி பகைபோக்கி உறவெல்லாம் சூழ
அழிவில்லை அறம்கூட்ட அடியாராய் விடுமே.
மண்ணில் ஒழுக்கமே மனிதனுக் கறிகுறி
எண்ணில் பிழையுறா வண்ணம் வாழ்மின்
கண்ணில் கருணையும் மனதில் தூய்மையும்
விண்ணில் தெய்வமாய் வாழ உதவுமே.
நின்னதை என்னதாய்க் கொண்டும்
என்னதே நின்னதாய் எண்ணும்
பொய்மையை விட்டு மீண்டு
மெய்மையில் வாழும் வண்ணம்
நின்மனம் இரங்கினா லன்றி
எனக்கிங் கீடே தில்லை
அன்பினில் உருகி உருகி
உன்னடி கிடப்பன் யானே.
அத்தனை சித்தனை ஆனந்த கூத்தனை
முத்தனை முதல்வனை முழுமறை வேந்தனை
இத்தரை உளவரை இதயத் திருத்திட
சத்தியம் இனியொரு பிறப்பிங் கிலையே.
பொய்யழகை மெய்யழகாய்ப் பேணிவாழு வோர்கள்
பொய்விட்டு வெளிவந்தால் புனிதமாகு வார்கள்
பொய்விட்டு வெளியேற குருவினருள் வேண்டும்
பொய்யில்லா மெய்யினர்க்கே குருகிடைக்கு மாமே.
ஆகாத தேதோ வதைநீக்கி நெஞ்சினுக்கு
சாகாதக் கல்வி புகட்டுங்கால் நோகாது
ஆகாய மொன்றே அடைக்கலமாய்க் கொண்டுலகில்
ஏகாந்த மாயிருக்க ஏற்பு.
மனமே உனக்கு வாழ்வுண்டு மண்ணில்
இனமே இனிமாறும் தெய்வாம்ச நிலையில்
கணமேனும் கடத்தாது தெளிவாய் மெய்யில்
குணமாற வழியுண்டு ஞானவெளி தொடர்பில்
போனவழி யெல்லாம் புகட்டாத வித்தையை
ஞானவெளி காட்டும் அறிவுற ஆனதெல்லாம்
மோனநிலை யாக்கி வருநாளில் சீர்த்தியுடன்
வானதெய்வ மாக்கும் மகிழ்ந்து.
நல்லது ஒன்றே நமக்குகந்த தென்று
அல்லது அகற்றி குருவழி நடந்தால்
சொல்லா வாக்கையும் செல்வாக் காக்கி
கல்லா வித்தையுங் கைகூட வைப்பார்.
உப்பில்லா பண்டத்தில் சுவைமுற்ற வழியுண்டோ
அப்பில்லா அழுக்கோட்டி சுத்தமுற்றப் பேருண்டோ
தப்பில்லா தவவாழ்வை பொய்யுற்றார் பெறுவதுண்டோ
எப்பவுமே அன்பொன்றே முழுமைக்குப் புள்ளிமுற்று.
என்னுளத்தில் பொங்குவது நின்கருணை ஜுவவூற்றே
தன்னுளமாய் தங்கினாயே அதுயான் பெற்றபேறே
இன்னுமொரு பிறவிவாரா வண்ணம் என்னை
அன்பினில் ஆழ்த்தி வினைநீக்கி ஆட்கொள்ளேன்.
பாடும் நிலைவந்தால் பாவங் கரைந்தோடும்
தேடும் மனங்கொண்டால் தெய்வம் உறவாகும்
கூடும் அடியார்க்கு உதவக் குறைபோகும்
நாடும் நெஞ்சென்றும் நடுநிற்க நலமே
தன்புத்தி எழும்போது தந்தை உதவான்
பின்புத்தி சேர்ந்தப்போ தாயும் உதவாள்
முன்புத்தி யால்மூண்ட மனத்தை அடக்க
அன்புத்தி யால்குரு அறிவை சேர்க்க.
தாய்குருதி தந்தைபுனல் ஆசான் ஆவி
ஆய்ந்தநடு புருவத்தே தெய்வம் ஊன்றி
ஓய்ந்தடங்கிப் போகும்முன் ஓர்ந்து தேர்ந்தார்
காய்ந்துசரு காவதில்லை கற்பக விருட்சமாம்
எல்லாரும் நல்லவரே என்றெண்ணி வாழுங்கால்
பொல்லாங்கு வாராது பொய்யொழித்த நெஞ்சினராய்
இல்லாரை இகழாது இடர்தருவோர் வழிநோக்கிச்
செல்லாது சோம்பாது இருத்தலே சிறப்பு.
இற்றைநாள் துயர்கண்டு இடிந்துளம் போகாது
அற்றைநாள் வினைப்பயனே எனக்கூர்ந்து உறுதியுடன்
சற்றுமறந் தவறாது சகிப்புடன் வாழுங்கால்
மற்றுமொரு வாழ்வுண்டு விண்ணேறும் நிலையே.
நன்றென்று நாடுரைத்தப் பொருளொன்றும் நலமில்லை
ஒன்றென்று உணர்தற்கு உலகெங்கும் வழியில்லை
இன்பென்று சார்வதெலாம் துன்பென்று தொடருவதால்
என்றென்றும் நிலைத்ததனை எடுத்துரைப்பாய் என்குருவே.
ஒருவாய்ப் பசிக்கு உருவாய் கொடுத்தால்
கருவாய் அடைக்கும் கதிவந் தேகும்
திருவாய்த் திறந்து குருவாய் மொழிந்தால்
அருவாய் அடங்கும் வானிலை தானே.
ஆதியான ஒன்றினை அடையவேண்டி துடித்திடில்
பேதியான பொருட்களை பித்தமென்று ஒதுக்கியே
நீதியான நெறிவழி நிமிர்ந்துநின்று வாழ்ந்திட
சோதியான குருபதம் சொந்தமாக்கி கொள்ளுமே.
தொட்டது துலங்கும் தொடர்ந்தருள் நிலைக்கும்
கெட்டது விலகும் கெடுமதி ஒழியும்
விட்டது கிடைக்கும் விரைந்தெழில் தழைக்கும்
இட்டமாய் குருவை இருத்திட நெஞ்சிலே
விட்டகுறை தீர்தற்கு வந்தபின் நொந்தெதற்கு
பட்டகடன் தீர்த்து பழிமாற்றி இட்டமுடன்
அட்டசித் தெய்துவண்ணம் நற்றவத்தார் சொன்னபடி
தொட்டவர் கால்பணிந்து வாழ்.
நாளொன்று உண்டென்று நம்பிவாழும் வாழ்விதனில்
கோள்வந்து செய்வதனை கண்ணறியோம் வாளா
விருப்பதனால் ஏதிங்கு கூடுமென் றாய்ந்து
விருப்ப முடன்செய்வோம் தொண்டு.
ஒன்பொருளாய் எண்ணி கொள்க ஞானத்தை
தன்பொருளாய் தவங்கூடும் தத்துவம் புலனாகும்
இன்பிருந்த இடத்தில் ஊற்றுப் பீச்செடுக்கும்
அன்பிருந்த அகமோ அண்டத்தைத் தாண்டிநிற்கும்.
ஆசை வருங்கோடி ஆயினுமென் செய்வோமென்
றோசை படாதிருக்கக் கற்றார்க்கு காசைப்
பெரிதென்று எண்ணுமனம் மாறி திடமாய்
உரியோன்பால் நிற்கும் நிலைத்து.
முன்னை வினைமூண்டு வந்த கதையிதனை
அன்னை மனங்கூட ஆயாதே இன்னுந்தான்
பின்னை வருநிலையைப் பாராது வாழுவதோ
தன்னை உணரவழித் தேடு.
நல்ல கல்வியும் நடுநீங்கா செல்வமும்
சொல்லத் தகுஞ்சிறப்பும் சொல்விளங்கும் மேன்மையும்
இல்லை என்றுரைக்கா வளமையும் வாய்ப்பும்
நல்லார் புடைசூழ நாளும் நிலைக்கவே.
இன்சொல்லும் பொய்யில்லா நெஞ்சும் அவைக்கஞ்சா
தன்னறிவுத் தூவொளியும் தான்பிறழா மென்குணமும்
என்றும் குறைவில்லா பல்வளமும் பெற்றிருப்பீர்
அன்பே யகத்துள் நிறைத்து.
வேண்டும் நலம்யாவும் வந்தெய் திடவுமருள்
தூண்டும் குருஞானம் குன்றாது யாண்டும்
தரணியிலே தொண்டே விடிவென்றுக் கொண்டு
திரணியுடன் நிற்பீர் நிலைத்து.
வானுண்டு வளமுண்டு வாழ்விக்க பூதமுண்டு
தானுண்டு தவமுண்டு என்றெண்ணித் தாரணியில்
பொய்யின்றி வாழும்போழ் தீதின்றி விதிவென்று
மெய்க்கொண்டு விண்ணேற வழிவந்து சேராதோ.
இல்லறமே இனிதென்று இசைந்துமனங் கோணாது
நல்லறத்தைப் பேணுவோர்க்கு நாளில் பயமில்லை
அல்லல் வாரா அடுத்துபகைச் செய்வோரும்
இல்லா தொழிந்திடுவர் இருப்பீர்நீர் மகிழ்ந்தே.
தோற்றம் மாறலாம்
நினைவு மாறாது
வீதியில் ஓடியாடிய நாட்களை
விதி முடித்து வைக்கலாம்
ஒன்றாக பள்ளிக்குச் சென்றதும்
என் முதல் நூல் வெளியீட்டு விழாவில்
தோள் கொடுத்து நின்றதும்
அந்திமத்தைத் தொடும்நேரம்
தேடிவந்து என் ஞான அமுதங்கள்
முதல் பிரதியை பெற்று மறைந்ததும்
முகம் மறைந்த பின்னிந்த
முகநூலில் சொல்லத்தானோ?
ஆட்டுவிப்பான் ஆரென் ற்றியாமல் ஆடுவோரை
பாட்டுவித்தால் என்செய்வர் பாடறியார் கூட்டுவித்து
ஊட்டுவித்தால் உள்ளக் கனல்மூண் டெழும்பாதோ
வீட்டுப் புறமொதுங்கத் தான்
ஞானக் கல்வியில் தேர்ந்திடணும் பிறர்
ஞானம் பெற்றிட உதவிடணும் தம்பி
வானம் வசப்பட வாழ்ந்திடணும் இந்த
வையம் உளவரை நிலைத்திடணும்
பிறந்த நாள்காணும் பெண்ணேநீ
பெருமைப் பெற்று வாழ்தற்கு
உகந்த வழிகள் இதிலுண்டு
உணர்ந்து கற்றால் புகழுண்டு
அறத்தைப் பேணிப் போற்றுதற்கு
ஞானக்கல்வித் துணையுண்டு
அகிலம் உன்னைத் தொடர்தற்கு
அன்பும் அறிவும் அடைவாயே.
Steps for your Success
Connectivity with Master
Free Meditation classes are available on all the days
People are invited to clarify their doubts on spritiual journey
Master give blessings to us on all evenings